Tuesday, December 31, 2013

ஆச்சரியத்துப்பால் 01 - நுதல் தரும் கவிதை



அதோ, கூப்பிடு தொலைவில்தான் அவர்கள் வீடு  
பனை வடலியின் அலங்காரத்தால் எல்லைப்படுத்தப்பட்ட ஒழுங்கை. மண் ஒழுங்கை என சொல்லலாம். பூவரச மரங்களின் நிழல். அந்த நடுக்காலைப் பொழுதில் நம் காளை ஒருவர் உந்துருளியில் பயணிக்கிறார். புதையும் சக்கரங்களையும் தாண்டி முழு மூச்சோடு அவர் போவது தன் தேவதையை தேடி. தேவதை எப்படியிருக்கும்? படங்களுக்கு வேணுமானால் வெள்ளாவியில் வெளுத்த தேவதைகள் கிடைக்கலாம். இது நிஜம்...அட காதலும் நிஜம்...ஆக கருப்பு தேவதை. மாநிறம் என்று சொன்னால் சந்தோஷப்படும் கருப்பு தேவதை. எங்கே ஒரு தடவை கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள் அவள் அழகை.  

காலத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட, தமயந்திகளின் கிணறு
அது அவள் கிணற்றில் தண்ணி அள்ள வரும் நேரம். அவள் வருகையை பாட சில பறவைகள் வரலாம். குயில் கிளி மைனா புறா மட்டுமில்லை கோழி சேவல் கூட ஆர்ப்பரிக்கும்...கூடவே நம்ம காகமும். தோழி இல்லாமல் கதாநாயகியா? தோழிகளுடன் தான் வருவாள். கல கல சிரிப்பும் சலங்கை ஒலியும் மஞ்சளும் மல்லிகையும்... அது தமயந்திகளின் அணிவகுப்பு! தனியே போகும் நம்மாளும் ஈச்சம் பத்தைகளும் பனை மரமும் கொண்ட நிழலுக்குள் நின்றுவிடுவார். இவர் வருகையை அறிவிக்க சில சொறி நாய்களும் பத்தைக்குள் இருந்த பாம்பும் வரலாம். 

காளைகளின் தரிப்பிடம்
சிறிது தூரத்தில் கிணறு. அந்த கிணற்றில்தான் அவள் தண்ணி அள்ளுவாள். ஊர்க்கிணறு - குளிப்பதற்கல்ல...குடிக்க மட்டும்! ஆக அவர் போவது குறுக்கு கட்டிய குமரிகளை  பார்க்க அல்ல! தன் தேவதையுடன் பேசவுமல்ல...ம்ம்.... சற்று பார்த்துவிட்டு வரத்தான். அவளும் இவரை நேருக்கு நேர் பார்க்கப்போவதோ பேசப்போவதோ  இல்லை. அருமையாக ஒரு புன்னகை கிடைக்கலாம். அவள் ஒன்றும் பிடிவாதக்காரி இல்லை. தோழிகளுக்கே தெரியாமல் நம்மாளை நேசிக்கிறாள். அந்த குமரிக் கூட்டத்துக்கு, காளை காத்துக்கொண்டிருப்பது தம்மில் ஒருத்திக்காகத்தான் என நன்றாகவே தெரியும்! அந்த ஒருத்தி யார் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. அது ஏழு கண்டம் தாண்டிப்போனாலும் அறியமுடியாத ரகசியம். நம்ம ராசா பார்க்கப்போயிருப்பது தேவதையின் நெற்றியை!  முத்தமிட்ட இடத்தில் காயமா? தடுக்கி விழுந்ததில் அடிபட்டிருச்சா....அல்லது அவளுடன் ஓடிப்பிடித்து விளையாடுமோது கிளுவை முள்ளு கிழித்து விட்டதா....இல்லை எதுவும் இல்லை...அந்த நெத்தி ஒரு செய்தி கொண்டுவருகிறது! வாருங்கள் அந்த குறுஞ்செய்தியை படிக்கலாம்
                 x x x
Pic- Internet
அந்த நுதல் தரும் கவிதை - இதோ இந்தக்கணத்தின் முதல் ஆச்சரியம் - பொட்டு. தேங்காய் சிரட்டையில் வைக்கப்பட்டிருக்கும் பாட்டி கைப்பட காய்ச்சிய பொட்டு. குங்குமப்பொட்டு, ஸ்டிக்கர் பொட்டு என சில வகை பொட்டுகள் இருந்தாலும், நமது ஆச்சரியம் காச்சின பொட்டு! ஸ்டிக்கர் பொட்டு ரொம்ப விலை என நினைக்கும் கிராமத்து பொண்ணுகளினது சாய்ஸ்! அப்படியே பிறந்த எல்லா பிள்ளைகளுக்குமான பாட்டிகளின் பரிசு.

கண்களை மூடி அந்த பாட்டியின் பொட்டை நினைத்துக்கொள்ளுங்கள்! அதை அள்ளியெடுத்து குழந்தையின் நெற்றியிலும் கன்னத்திலும் வைத்து உம்மா குடுக்கும் பாட்டி வருகிறாளா? எத்தனை அழகான தருணங்கள் அவை! கன்னங்கரேல் என கருங்காலி நிறத்தில் இருக்கும் நம்மைப்போன்ற ராசாக்களுக்கும் அந்த பொட்டை தொடருந்தின் ஹெட் லயிட் சயிசுக்கு வைப்பாங்க. எல்லா புள்ளைங்களுமே குறைந்த பட்சம் இரு பொட்டுகளுடன் ஒரு போட்டோவாவது எடுத்திருக்கும். கண்ணூறு பட்டாலும்னு கன்னத்திலும் ஒரு பொட்டு வேற.  'பொட்டு வைக்குமாம் எங்கட புள்ள, லட்டு திங்குமாம் எங்கட புள்ள சிட்டு குருவியாம் எங்கட புள்ள' என வீராச்சாமி வசனங்கள் போல எதுகை மோனையில எடுத்து விட்டு, கைதட்டி அந்த புள்ளைய கமராவ பாக்கவைச்சு ஒரு போட்டோ புடிக்கிறதுக்கிள்ள உசிர் போயிரும். கமராக்காரனும் வேர்க்க விறுவிறுக்க நின்னு படம் பிடிச்சிட்டு போவார். அப்பெல்லாம் உடனே படத்த பார்க்க முடியாது. அவரு பெரிய மனசு பண்ணி கொண்டுவரும்போது கண்டுக்க வேண்டியதுதான்.  

சின்ன புள்ளைங்களுக்கு அவ்வளவா சூட் ஆகாட்டிலும் கிராமத்து வயசுப்பொண்ணுகளுக்கு அது அழகோ அழகு. பிற்காலத்தில் சிறிய போத்தலில் வந்த கருப்பு பொட்டை பெரும்பாலான குமரிகள் பாவித்தாலும் அது சிரட்டை பொட்டைத்தான் நினைவுபடுத்தும். பொட்டுப்பொத்தல் ஒன்றை கோயில் பக்கமோ, தண்ணி அள்ளவோ, விறகு பொறுக்கவோ, அல்லது மாடு கட்டவோ வந்த தமது காதலிக்கு வாங்கி கொடுத்துவிட்டு போற வாற இடமெல்லாம் புள்ள பொட்டோட வருகுதான்னு கிராமத்து காளைகள் காத்திருப்பாங்க. அந்த  பொட்டு வைச்ச வட்ட நிலாவும் அங்கால இங்கால போய் வரேக்க நெத்திய லயிட்டா சொறிஞ்சு ஒரு புன்னகையோட 'உன் பொட்டுத்தான் வச்சிருக்கன் சாமி'  என சிக்னல் குடுக்கும்.   இவர கடுப்பாக்கனும்னா பொட்டு வைக்காம வரும். ஐயா கெஞ்சி கூத்தாடி பிறகு பொட்டு வைக்கப்பண்ணுவார். 

எதாச்சும் பழைய இலக்கியங்கள் பொட்டு வைச்ச காதலை சொல்லியிருக்குதான்னு தெரியல. மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் கிராமங்களில் ஒரு பார்வையுடன் அல்லது புன்னகையுடன் பதிவாகிவிடுகிறது சாகும் வரை வாழும் பொட்டு வைச்ச காதல்கள். இங்கெல்லாம் கிரெடிட் காட்டின் பெறுமதி, ஓட்டும் கார், செய்யும் வேலை, சிக்ஸ் பேக்   என்பவற்றை  காட்டித்தான் வருகிறது காதல். இங்கே பொட்டு வாங்கிகுடுத்தா அவ வீட்டு நாய்க்கூட்டு கதவுகூட திறக்காது. இதில இதய கதவாவது திறக்கிறதாவது. ஒற்றைப்புள்ளியான அந்தப்பொட்டு நம் வாழ்வில் எத்தனை விதங்களில்  எத்தனை நிலைகளில் வந்து குடியேறி இருக்கிறது!  

X X X 

Pic -Internet பொட்டில்லை! ஊடலாக இருக்குமோ?
ஆக, காத்திருக்கும் நம்ம காளையின் காதலியின் நெற்றி கொண்டுவரப்போகும் அந்த குறுஞ்செய்தி ஒரு சின்னப்புள்ளிதான். அந்த ஒற்றைப்புள்ளி எஸ் எம் எஸ் எந்த நவீன ஸ்மார்ட் போன்களாலும் மொழிபெயர்க்க முடியாத ரகசியம்! அதோ தமயந்திகளின் படை! நளனுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கிக்கொள்ளலாம். அவர் ரசித்து தொலைக்கட்டும். அன்னங்களாகிவிட்டன பொட்டுப்போத்தல்கள்.

வாழ்க்கையோடு சேர்ந்து விட்ட இந்த பொட்டு கூட உச்சியில், கழுத்தில் என வெவ்வேறு இடங்களில் வலம்வருவதன் காரணம் எனக்கு மட்டுமல்ல அதை வைக்கும் பல பெண்களுக்கும் தெரியாது. இந்த மர்மத்தை எனது பூராயங்களால் புடுங்க முடியவில்லை. அதைப்பற்றிய கட்டுகதைகள் தான் இன்னமும் உலாவிவருகின்றன. பொட்டை எந்த விரலால் வைக்கணும் என்றதெல்லாம்  எந்த புண்ணியவான் கண்டுபிடிச்ச புதினமோ தெரியல. 

"ஏம்மா  பொட்டு வைக்குறது?" என  இன்னும்  நம் குழந்தைகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன! நாமும் விஞ்ஞானம் வரலாறு என ஏதாவது ஒரு சமாளிபிகேசன் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.  "கறுப்பில அந்த போத்தல் பொட்டு வை அதுதான் நல்லாருக்கு"  என தம் காதலிக்கு சொல்லும் காளைகளும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பளிங்கு மாளிகையாய் இருக்கும் அவளின் நெற்றிக்கு மினுங்கல் பொட்டுகள் வேண்டாம்... கறுப்புப்பொட்டே மேல். அந்த ஒற்றைப்புள்ளி, "நான் தமிழச்சி" எனவும் சொல்வதுபோல் இருக்கிறது. 

ஏதோ நெத்தியில் மட்டும்தான் இருக்கிறதென நினைத்தால், பொட்டு எங்கள் வாழ்வின் எத்தனையோ பக்கங்களில் ஒட்டி இருக்கிறது. 
அந்த பொட்டு காய்ச்சும் விதத்த எப்புடி கண்டுபிடிச்சிருப்பாங்கள் எண்டதுதான் ஆச்சரியத்தின் காரணம். சொல்லுங்கள், நம்மில் எத்தனை பேருக்கு அந்த பொட்டு காய்ச்ச தெரியும்?

உங்கள் பொட்டுக்கதைகளையும் சொல்லி ஆச்சரியப்படுத்துங்களேன்!  




6 comments:

  1. உரைநடையின் வார்த்தைகள் அழகாய் உணர்த்தி செல்கிறது எழுதியவன் கவிஞனென்று.. அருமை வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! உங்கள் பொட்டுவச்ச காலத்தைப்பற்றி எதாச்சும் நினைவுகளை ஏன் வரிகள் கிளறியிருந்தால் சந்தோசம்!

      Delete
  2. அழகான அருமையான எழுத்து நடையை ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் அந்தநாள் நினைவுகளில் ஒரு சிறு துரும்பையேனும் என்வரிகள் கிளறியிருந்தால் - சந்தோசம்.

      Delete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete